

கோவை:
கோவை கணபதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி. இவருக்கு அவரது உறவினரான சேலத்தை சேர்ந்த சங்கர் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த விவகாரம் மாணவியின் தாய்க்கு தெரிய வரவே அவர் தனது மகளை கண்டித்தார். மேலும் வாலிபருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
இது குறித்து மாணவி தனது உறவினரிடம் தெரிவித்தார். அப்போது மாணவியிடம் சங்கர் நாம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறினார்.
அதன்படி நேற்று கோவை வந்த வாலிபர் மாணவியிடம் திருமணம் ஆசை காட்டி அவரை சேலத்துக்கு அழைத்து சென்றார்.
வீட்டில் இருந்த தனது மகள் திடீரென மாயமானது கண்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். அப்போது மாணவியை சங்கர் திருமண ஆசை காட்டி சேலத்துக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் தாய் மைனர் பெண்ணான தனது மகளை சங்கர் திருமண ஆசை காட்டி கடத்தி சென்று விட்டதாக சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்தி சென்ற சங்கரை தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சங்கர் மாணவியுடன் சேலத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். அவரை திருமண ஆசை காட்டி கடத்தி சென்ற சங்கரை கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.