கப்பலூர் சுங்கச்சாவடியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்- அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

கப்பலூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வாகனங்களில் வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.
கப்பலூர் சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சி.
கப்பலூர் சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சி.
Published on

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சுங்கச் சாவடி அமைந்துள்ளது. விதிமுறைப்படி டவுன் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் சுங்கச்சாவடி அமைந்திருக்க வேண்டும். ஆனால் திருமங்கலத்தில் விதிமுறைகளுக்கு முரணாக மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே கப்பலூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.

இந்த சுங்கச்சாவடி வழியாக விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தினமும் அரசு பஸ்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. 1 முதல் 5 வரை உள்ள கவுண்ட்டர்கள் வழியாக மதுரைக்கு வாகனங்கள் செல்கின்றன.

1-வது கவுண்ட்டர் வழியாக கட்டணம் செலுத்திச் செல்லும் வாகனங்களும், 2 முதல் 5-வது கவுண்ட்டர் வரை பாஸ் டேக் வாகனங்களும் செல்லும்.

6 முதல் 10-வது கவுண்ட்டர் வரை மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வாகனங்கள் செல்லும். இதில் 10-வது கவுண்ட்டர் மட்டுமே கட்டணம் செலுத்திச் செல்லும் வழி. மீதம் உள்ள 6 முதல் 9 வரை உள்ள கவுண்ட்டர் வழியாக பாஸ் டேக் வாகனங்கள் செல்லும்.

இந்த சுங்கச்சாவடியில் அடிக்கடி கணினி பழுது அடைந்து விடுவதாலும், பாஸ் டேக் சரியாக வேலை செய்யாமல் இருப்பதாலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களும் தினமும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் தினமும் நெரிசலில் சிக்கி வருகின்றன. இதனால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பஸ்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் விரைந்து செல்ல முயற்சி செய்வதால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த சுங்கச்சாவடியில் அடிப்படை வசதி, குடிநீர் இல்லாத நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் வாகனங்கள் சிக்கி அவதிப்பட்டு வருகின்றன.

மேலும் இங்கு தினமும் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த சுங்கச்சாவடியை அங்கிருந்து இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com