சாத்தான்குளம் சம்பவத்தை நினைவுபடுத்துகிறார்களா?- கோவை உணவகம் தாக்குதலுக்கு கமல் கண்டனம்

கோவையில் ஓட்டலில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

கோவை:

கோவையில் ஓட்டலில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, 

இரவு 11 மணியை தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில் 10.30 மணிக்கு முன்னதாகவே போலீசார் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரை தாக்கியது சாத்தான்குளம் படுகொலைகளை நினைவு படுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது, அரசு நிர்வாகத்தின் கடமை என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல கோவை எம்.பி. நடராஜன் உள்ளிட்டோரும் சப்-இன்ஸ்பெக்டருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூறுகையில் பெண்கள், குழந்தைகள் மேல் நடத்தப்பட்ட தடியடி கண்டிக்க கூடியது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர் வேறுதுறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது கண் துடைப்பு போல் உள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட வேண்டும் என கூறி உள்ளார்.

தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் காரணமாக உணவகம், டீ கடைகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி, இரவு 11 மணி வரை கடைகள் திறக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு கடந்த 10-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தநிலையில் 11-ந் தேதி இரவு 10.20 மணிக்கு காந்திபுரம் பஸ் நிலையம் ஓட்டலில் சிலர் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கொரோனாவை காரணம் காட்டி அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், கடை ஊழியர்களை லத்தியால் தாக்கினார். இதில் பெண்கள் உள்பட பலர் காயம் அடைந்துள்ளனர். போலீசாரின் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சம்பவம் தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com