இலங்கை அரசின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம் - மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்

இலங்கையில் 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட துயர சம்பவத்தில், அந்த நாட்டு அரசின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
Published on

புதுடெல்லி:

தமிழகத்தின் ராமேசுவரம் அடுத்த தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள், கடந்த மாதம் கடலில் மீன் பிடிக்கச்சென்றிருந்தனர். ஜனவரி 18-ந்தேதி அவர்களது படகுடன், இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி மூழ்கடித்தது.

இதில் 4 மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம், இங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த துயர சம்பவம் குறித்த கேள்விகள், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று எழுந்தன. அவற்றுக்கு வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

இந்த துயர சம்பவத்தில், இலங்கைக்கு நாம் நமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். அதன் பலனாக அவர்கள் ஒரு விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்த விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம். அதே நேரத்தில் இந்த விவகாரத்தை மத்திய அரசு மிக மிக கடுமையாக எடுத்துக்கொண்டுள்ளது என்பதை நான் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது இலங்கையில் இந்திய மீனவர்கள் யாரும் காவலில் இல்லை. சமீப காலம் வரை 9 பேர் காவலில் இருந்தார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

இப்போதைய நிலவரப்படி, அங்கு இந்திய மீனவர்களின் (தமிழக மீனவர்களின்) 62 படகுகள் உள்ளன. அவற்றை இலங்கையின் காவலில் இருந்து விடுவிக்க நாங்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.

முன்பு 173 படகுகள் இருந்தன. அவற்றில் 36 படகுகள் மீட்கப்படக்கூடியவை. மீட்க முடியாத படகுகளுக்கான ஏல நடைமுறைகள் தற்போது விவாதத்தில் உள்ளன. எவற்றை திரும்ப பெற முடியுமோ, அவற்றை திரும்பப்பெறுவோம். எவற்றை மீட்க முடியுமோ அவற்றை மீட்போம். அதற்கான முயற்சி எடுக்கிறோம். மீட்பை விரைவு படுத்துவோம்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு மிக கூடுதலான முன்னுரிமையை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் இலங்கையால் பிடிக்கப்படுவது பற்றிய தகவல் கிடைக்கிறபோதெல்லாம், தூதரக ரீதியில் இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் எடுத்துச்செல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com