சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 70 சதவீத அரசு பஸ்கள் ஓடின

தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தனியார் பஸ்கள் வழக்கம் போல ஓடின.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சேலம்:

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார்கள். இதையடுத்து கடந்த 18-ந் தேதி 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பின்னர் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதையொட்டி சேலம் கோட்டத்திலும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணி முதல் 8 மணி வரை வெளியூர் செல்ல வேண்டிய 25 பஸ்களில் 19 பஸ்கள் புறப்பட்டு சென்றன. மேலும் பெரும்பாலான பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. கிராம புற பஸ்கள் நேற்றிரவே நிறுத்தப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 800 அரசு பஸ்களில் சேலம்,ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி, மேட்டூர், ஓமலூர் ஆகிய டெப்போக்களில் இருந்து சுமார் 70 சத பஸ்கள் இன்று காலை இயக்கப்பட்டன. மேலும் அனைத்து பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல நாமக்கல்லில் உள்ள 350-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக பஸ்கள் இயங்கின. இந்த பஸ்களிலும் கூட்டம் குறைவாக இருந்தது.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களில் 60 சதவீத பணியாளர்கள் பணிக்கு செல்லவில்லை. ஆனால் நேற்று பணிபுரிந்த ஊழியர்களை வைத்து மீண்டும் பஸ்களை இயக்கி வருகிறார்கள். இன்று மாலை முதல் 80 ஊழியர்கள் பணிக்கு செல்ல மாட்டார்கள். மேலும் வரும் நாட்களில் படிப்படியாக அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள்.

தற்போது குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அரசு எங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் . இதில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தனியார் பஸ்கள் வழக்கம் போல ஓடின.

X

Maalai Malar
www.maalaimalar.com