

பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஞானாம்பிகை (வயது 54). இவர் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அங்காளம்மன் கோவில் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலின் கூரை ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் வேயப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ஓட்டலை பூட்டி விட்டு ஞனாம்பிகை வீ்ட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை 5 மணிக்கு இவருடைய ஓட்டல் தீப்பிடித்து எரிந்துள்ளது. சிறிது நேரத்தில் அங்கு இருந்து சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் பதறிப்போன அக்கம் பக்கத்தினர் இது குறித்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் அங்கிருந்த மேசைகள், நாற்காலிகள் மற்றும் இதர பொருட்கள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தீ விபத்து நடந்த ஓட்டலில் மொத்தம் 3 கியாஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளன. அதில் 2 சிலிண்டரில் கியாஸ் இல்லை. ஒரு சிலிண்டரில் குறைந்த அளவே கியாஸ் இருந்துள்ளது. இந்த சிலிண்டர் மட்டும் வெடித்துள்ளது. இதனால் பாதிப்பு அதிகம் இல்லை.