

வருசநாடு:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. பெரியகுளம், தேவதானப்பட்டி, போடி, உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையினால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முற்றிலும் மழை இல்லாத நிலையில் மூல வைகை ஆறு வறண்டு காணப்பட்டது. இதனால் இப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த உறை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து கொண்டே சென்றது.
இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக மூல வைகை ஆற்றில் நீர் வரத்து தொடங்கியுள்ளது. மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரியாறு அணையின் நீர் மட்டம் 133.40 அடியாக உள்ளது. வரத்து 640 கன அடியாகவும், திறப்பு 100 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5493 மில்லியன் கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 66.40 அடியாக உள்ளது. வரத்து 373 கன அடி. நேற்று வரை 1969 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 830 கன அடி தண்ணீர் குறைக்கப்பட்டு 1199 கன அடியாக திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4947 மில்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 119.06 அடியாகவும் உள்ளது.
பெரியாறு 15.8, கூடலூர் 38.7, வீரபாண்டி 8.6, வைகை அணை 0.8, மஞ்சளாறு 30, மருதாநதி 2.7, சோத்துப்பாறை 14, கொடைக்கானல் 43 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.