

கவுகாத்தி:
வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 34 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.
இதனால் 6.47 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்பாரி, தர்ராங், லகிம்பூர் ஆகிய மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
1,300 கிராமங்களில் 39 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. 10 மாவட்டங்களில் 85 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
காசிரங்கா தேசிய பூங்காவில் 70 சதவீத பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் சில விலங்குகள் இறந்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
10 மான்கள் மற்றும் ஒரு குரங்கு இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மழை வெள்ளத்தால் தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், பள்ளி மற்றும் அரசு தனியார் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.