

கோவை:
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதன்காரணமாக இந்தியா-இங்கிலாந்து இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் இங்கிலாந்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் முதல் வந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.
கோவைக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் இங்கிலாந்தில் இருந்து 110 பேர் வந்து இருந்தனர். இவர்களில் 100 பேரின் பட்டியல் சேகரிக்கப்பட்டு சுகாதாரத்துறை சார்பில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 100 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் 10 பேரின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-
இங்கிலாந்து நாட்டில் இருந்து கோவைக்கு 133 பேர் வந்ததாக விவரங்களில் சேகரிக்கப்பட்டது. இதில் 23 பேரின் பெயர்கள் இருமுறை பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து முதல்கட்டமாக 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அனைவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 10 பேரின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து கோவை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மருத்துவ குழுவினர் கண்காணித்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் சோதனை சாவடிகளிலும் மருத்துவ குழுவினர் கண்காணித்து வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலமாக வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.