சித்தூர் அருகே இளம்பெண்ணிடம் பேசியதால் குடியாத்தம் வாலிபர் குத்திக்கொலை

சித்தூர் அருகே இளம்பெண்ணிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததால் குடியாத்தம் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
கொலை
கொலை
Published on

திருப்பதி:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சையது தமிம் (வயது 27). இவரது சகோதரி வீடு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேரியில் உள்ளது.

நேற்று முன்தினம் சகோதரி வீட்டுக்கு சென்ற சையது தமிம் அவரை பார்த்துவிட்டு நேற்று மீண்டும் குடியாத்தம் செல்வதற்காக பலமநேர் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

பஸ் நிலையத்தில் இருந்த இளம்பெண்ணிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பலமநேர் எஸ்.டி.காலனியை சேர்ந்த மகேஷ்குமார் பஸ் நிலையத்திற்கு வந்தார். பஸ்நிலையத்தில் சையது தமிம் இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்ட மகேஷ்குமார் ஆத்திரமடைந்து இளம்பெண்ணிடம் ஏன் நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருக்கிறாய் என கேட்டார்.

இதில் மகேஷ்குமார், சையது தமிம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து மகேஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் சையது தமீமை குத்தினார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சையது தமிம் கீழே விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் சையது தமிமை மீட்டு சிகிச்சைக்காக பலமநேர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பலமநேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மகேஷ்குமார் ஏற்கனவே குற்ற செயலில் ஈடுபட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பலமநேர் கிளை சிறையில் இருந்து விடுதலை ஆனது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தலைமறைவாக உள்ள மகேஷ்குமார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com