கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல் போராட்டம் - 168 பேர் கைது

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 168 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசு ஊழியர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்.
அரசு ஊழியர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்.
Published on

கிருஷ்ணகிரி:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் நடராஜன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். மேலும் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், முருகன், கோவிந்தராஜ், கல்யாணசுந்தரம், தேவராஜ், சிவா உள்ளிட்டோர் பேசினார்கள்.

இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 2019-ல் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 5,068 பேர் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை பெற்றிட வேண்டும். அரசுத் துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக 86 பெண்கள் உள்பட 168 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com