

தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 6-வது நாளாக நேற்றுகாலை தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கோதண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அன்புமணி தொடங்கி வைத்து பேசினார்.பின்னர் அரசு ஊழியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சாலையை நோக்கி சென்றனர். சிறிது தூரம் சென்றவுடன் அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ்(கிழக்கு), சந்திரமோகன்(மேற்கு) ஆகியோர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து அரசு ஊழியர்கள் மறியில் ஈடுபட்டனர். பெண் ஊழியர்கள் சிலர், ஒப்பாரி வைத்து போராடினர்.
போராட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.