திருவாரூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல்

திருவாரூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருவாரூர்:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் மற்றும் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணிபுரியும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுத்துறையில் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தை கடந்த 2-ந் தேதி அரசு ஊழியர் சங்கத்தினர் தொடங்கினர். நேற்று 4-வது நாளாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவாரூர் தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com