அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கு: 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

போடி பாரதிதாசன் சந்து கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவர், போடி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந்தேதி உத்தமபாளையத்தில் இருந்து போடிக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். சங்கராபுரம் கருப்பசாமி கோவில் அருகில் வந்த போது, அதே ஊரைச் சேர்ந்த வைரம், பாண்டி மகன் ராஜா (40), ராஜேந்திரன் மகன் பூங்கொடி என்ற பூபதி (27) ஆகியோர் பஸ்சை வழிமறித்தனர். பின்னர் பஸ்சில் ஏறும் போது அவர்கள் டிரைவர், கண்டக்டருடன் தகராறு செய்தனர். மேலும் அவர்கள் பஸ் மீது கல்வீசினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. 

இந்த சம்பவம் குறித்து டிரைவர் செல்வம் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ராஜா, பூபதி, வைரம் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், வைரம் உயிரிழந்துவிட்டார். 

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் டி.கே.ஆர்.கணேசன் ஆஜராகி வாதாடினார். வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி விஜயா நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி, இந்த வழக்கில் ராஜா, பூங்கொடி என்ற பூபதி ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com