

தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் பெரிய மாதா சர்ச் தெருவைச் சேர்ந்த கிளின்டன் (வயது 25). இவரை தூத்துக்குடி சாமுவேல்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (24) உள்பட 3 போ் சேர்ந்து கொலை செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அந்தோணிராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு பரிந்துரை செய்தார்.
அதுபோல் சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அருகே உள்ள மறவன்மடம் தம்பிக்கை மீண்டான் பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் (45) என்பவர் தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த ஒருவரை பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமுருகனை கைது செய்தனர். இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார்.
இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிக்கு பரிந்துரைத்தார்.
அதன் பேரில் அந்தோணிராஜ், ஜெயமுருகன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.