7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: புதுமாப்பிள்ளைக்கு 10 ஆண்டு ஜெயில்

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைச் செய்த புதுமாப்பிள்ளைக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
விக்னேஷ்
விக்னேஷ்
Published on

வேலூர்:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதி பக்கிரிமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர், 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைச் செய்தார். மேலும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என எச்சரித்து, கொலை மிரட்டலும் விடுத்தார்.

ஆனால் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர் அவளிடம் கேட்டபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில் விக்னேசுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் அவரை ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சந்தியா ஆஜராகி வாதாடினார். வழக்கு நடந்து வந்த காலக்கட்டத்தில் விக்னேஷ் வேறு ஒரு பெண்ணை காதலித்தார். அந்தப் பெண்ணை அவர் ஒருசில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com