திருச்சி சுடுகாட்டு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது

திருச்சியில் சுடுகாட்டு பகுதியில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்றிருந்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

திருச்சி:

திருச்சி மணல்வாரித்துறை சாலையில் அங்குள்ள சுடுகாட்டு கட்டிடத்தின் பின்புறத்தில் சிலர் கைகளில் அரிவாள், கத்தி மற்றும் மரக்கட்டைகளுடன் ஏதோ சதி செயலில் ஈடுபடும் நோக்கில் நின்று கொண்டிருந்தனர்.

அதைப்பார்த்து அவ்வழியாக சென்ற, திருச்சி சங்கிலியாண்டபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஷேக்முகமது என்பவர் திருச்சி பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக போலீஸ் உதவி கமிஷனர் ரவிஅபிராம் உத்தரவின்பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓடமுயன்றவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இருப்பினும் அவர்களின் ஒருவன் தப்பி ஓட்டம் பிடித்தான். பின்னர், ஆயுதங்களுடன் நின்ற பாலக்கரை திருமுருகன் பேட்டரிலைன் பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (வயது 21), குருவிக்கார தெருவை சேர்ந்த மணிகண்டன் (22), மகேந்திரன் (21) மற்றும் சங்கிலி யாண்டபுரம் தெரசம்மாள் தெருவை சேர்ந்த ஜஸ்டின் கிறிஸ்துவராஜ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி மற்றும் மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ரகுராம் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். ஆயுதங்களுடன் எதற்காக சுடுகாட்டு பகுதியில் அவர்கள் காத்திருந்தனர்? என்றும், யாரையாவது தீர்த்து கட்டும் நோக்கில் சதித்திட்டத்துடன் கூடினார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், முழுமையான காரணம் தெரிவிக்கப்படவில்லை. பின்னர் கைதானவர்கள் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com