தவறான தகவல்களை பரப்புகிறார்- ராகுல்காந்தி மீது நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு

நாங்கள் பணக்காரர்களுக்காக வேலை பார்க்கவில்லை. சாதாரண மக்களுக்கு வேலை பார்த்து வருகிறோம் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி:

மத்திய பட்ஜெட் கடந்த 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறும்போது, “பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால் போடப்பட்ட பட்ஜெட்” என்று விமர்சித்தார்.

இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவையில் இன்று காலை பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை உலகின் மிக முக்கிய பொருளாதார சக்தியாக மாற்றும்.

கொரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்ட சவால்களால் இந்தியாவின் நீண்ட கால இலக்குகளை எட்டுவதற்கான திட்டங்களை ஒருபோதும் கைவிட முடியாது.

சுகாதார துறையில் மிக சீரான அணுகுமுறையை மத்திய அரசு கையாண்டு வருகிறது. முதலில் வரும் முன் காப்போம் என்ற கொள்கையையும், பிறகு நோய் வந்தபின் அதனை போக்கும் வகையிலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்ல மத்திய பட்ஜெட் உதவும்.

பொருளாதாரத்தை மறு சீரமைப்பதே எங்களின் முதன்மை நோக்கம். அதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளன.

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.6 ஆயிரம் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

நாங்கள் பணக்காரர்களுக்காக வேலை பார்க்கவில்லை. சாதாரண மக்களுக்கு வேலை பார்த்து வருகிறோம். காங்கிரஸ் பணக்காரர்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு வி‌ஷயங்களில் போலியான கதைகளை உருவாக்குகிறார். இந்த பட்ஜெட் ஏழைகளையும், விவசாயிகளையும் முன்னேற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அமர்வுக்கு பிறகு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி மார்ச் 8-ந்தேதி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com