தரங்கம்பாடி அருகே பைபர் படகில் வைத்து மீனவர் அடித்து கொலை

தரங்கம்பாடி அருகே இன்று காலை கடலில் வலை விரித்து மீன் பிடிப்பதில் மோதல் ஏற்பட்டதால் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலை
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பேட்டை சுனாமி காலனியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42) மீனவர். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை மூர்த்தி பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அவர் கடலில் வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அருகே உள்ள வானகிரி கிராமத்தை சேர்ந்த மீனவர்களும் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

திடீரென மூர்த்தி விரித்த வலை மீது வானகிரி மீனவர்களும் வலை விரித்தனர். இதனால் மூர்த்திக்கும், வானகிரி மீனவர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே வானகிரி மீனவர்கள் ஆத்திரம் அடைந்து படகில் இருந்த கட்டையால் சரமாரியாக மூர்த்தியை தாக்கினர். இதில் ரத்தவெள்ளத்தில் படகிலேயே மூர்த்தி சரிந்து விழுந்தார்.

இதையடுத்து மூர்த்தியை புதுப்பேட்டை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தரங்கம்பாடி கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த காவல்படையினர் மூர்த்தியை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் கடலோர காவல்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com