மீன்பிடி தடை காலம் மற்றும் ஊரடங்கு காரணமாக மீன் விலை கிடுகிடு உயர்வு

ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை மீன் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகுகள் கடலில் மீன் பிடிப்பதற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீன்கள்
மீன்கள்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்திலேயே மிக அதிக நீண்ட கடற்கரையைக் கொண்ட மாவட்டம் ஆகும். கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் முதல் கேரள மாநில எல்லையான நீரோடி வரை 30 மீனவ கிராமங்கள் உள்ளன.

இந்த மக்களின் பிரதான தொழில் மீன்பிடித் தொழில் ஆகும். இது தவிர்த்து சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம், குளச்சல் மீன்பிடி துறைமுகம், மற்றும் தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் ஆகிய துறைமுகங்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிடிக்கப்படும் மீன்கள் தமிழகத்தின் பெரும்பாலான உள் மாவட்டங்களுக்கும் கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இது போல் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இங்கிருந்து மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை மீன் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகுகள் கடலில் மீன் பிடிப்பதற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து சிறிய ரக வள்ளம் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மீனவர்கள் அதிக அளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை. அவ்வாறு சென்றாலும் போதிய அளவு மீன்கள் கிடைப்பதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காலை 10 மணி வரை மட்டுமே மீன்களை விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருப்பதால் வெளியூர்களில் இருந்து மீன் வாங்க வியாபாரிகளும் அதிக அளவில் வருவதில்லை. இது போன்ற பல்வேறு காரணங்களால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் மிகப்பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

குறைந்த அளவு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு செல்வதால் மிகக் குறைந்த மீன்கள் பிடித்துக் கொண்டு வரப்படுகின்றன. அதிலும் பெரிய மீன்கள் எதுவும் கொண்டு வரப்படுவது இல்லை சிறிய ரக சாளை, நெத்திலி போன்ற மீன்கள் மட்டுமே வருகின்றன. இவற்றை உள்ளூர் பகுதி மக்கள் வந்து வாங்கிச் செல்கின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com