காதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு

வருகிற 17-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன் குழம்பு
மீன் குழம்பு
Published on

அரியலூர்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 30). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்டசோழபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு, இரு வீட்டார் சம்மதத்துடன் வருகிற 17-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக நிஷாந்த் வேலை பார்த்த அலுவலகத்திற்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட அந்த பெண் வீட்டிற்கு நிஷாந்த் வந்துள்ளார்.

அங்கு அவருக்கு மீன் குழம்பு வைத்து சாப்பாடு கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட நிஷாந்த், சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நிஷாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நிஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாந்தின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com