

கோவை:
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் கூட்டு குழுவினர் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமை வகித்தார். 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கையில் வாழை, தென்னை மரங்களை வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், "கடந்த ஆட்சியில் உரிமைக்காக போராடிய விவசாயிகள், பொதுமக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றை வாபஸ் பெற வேண்டும். மின்சார சட்டத்திருத்தம் மூலம் இலவச மின்சாரம் ரத்து செய்கின்ற மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும். மேலும் 3 வேளாண் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்றனர்.