

திருச்சி:
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், ரத்து செய்ய வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக இந்திய விவசாயிகள் தொடர்ந்து பேராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர். ஆனாலும் தற்போது வரை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. ரத்து செய்யும்வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கடந்த 7 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் இந்திய விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும் போராட்டம் நடத்தப்போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் அறிவித்தது.
அதன்படி இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். அப்போது சற்று தூரத்திற்கு முன்பாகவே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் விவசாயிகள் கலெக்டர் அலுவலக சாலையில் கொளுத்தும் வெயிலில் தரையில் படுத்து போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை நிழலான பகுதிக்கு மற்ற விவசாயிகள் கைத்தாங்கலாக அழைத்து சென்று தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது:-
மாநில அதிகாரத்தில் உள்ள வேளாண் துறையை மத்திய அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கையில் எடுத்து 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
அந்த 3 வேளாண் சட்டங்களும் நடைமுறைக்கு வந்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொடுத்து சாகுபடி செய்ய சொல்வார்கள். அதனால் அதிக லாபம் கிடைக்கும் என்று இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் கிடைக்கும் உணவை உண்டால் ஆண்மையிழக்கும் நிலை உருவாகும்.
இந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் 210 நாட்களாக விவசாயிகள் போராடுகிறார்கள். ஆனால் அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு ஆதரவாகவும், மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லிக்கு சென்று போராட அனுமதி வழங்க கோரியும் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்றார்.
தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் என்.வி. கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு புதிய வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கிடவேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதேபோல் பட்டுக்கோட்டை, கும்பகோணம் தலைமை தபால் நிலையங்கள் முன்பு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தாசில்தார் அலுவலகம் முன்பு டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் மற்றும் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஈரோடு மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.