

தேனி:
தேனி அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிராஜ் விவசாயி. இவர் சொந்தமாக பால் மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார். தற்போது தேனீர் கடைகள், ஓட்டல்கள் இல்லாததால் தனக்கு கிடைக்கும் பாலை விற்பனை செய்ய முடியாத நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் அதனை பயனுள்ளதாக மாற்றும் வகையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் செயல்படும் கொரோனா சிகிச்சை மையத்துக்கும், வட வீரநாயக்கன்பட்டியில் செயல்படும் கொரோனா சித்த மருத்துவ மையத்துக்கும் இலவசமாக வழங்கினார்.
இந்த 2 மையங்களுக்கும் தலா 40 லிட்டர் வீதம் பால் வழங்கினார். கடந்த சில தினங்களாக தனது குடியிருப்பு பகுதியிலேயே பொதுமக்களுக்கு பாலை இலவசமாக வழங்கி வந்தார்.
இது குறித்து சீனிராஜ் தெரிவிக்கையில், கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கடைகள் இயங்கவில்லை. இதனால் பால் விற்பனை குறைந்துள்ளது.
இதனை கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்து இலவசமாக வழங்கி வருகிறேன். தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கும் வரை இந்த சேவையை செய்வேன் என்று தெரிவித்தார்.