பேராவூரணி அருகே மதுபோதையில் தகராறு செய்த விவசாயி வெட்டிக்கொலை- மனைவி கைது

பேராவூரணி அருகே மதுபோதையில் தகராறு செய்த விவசாயியை வெட்டிக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கொலை
கொலை
Published on

பேராவூரணி:

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பழுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 70).விவசாயி. இவருடைய மனைவி கருப்பாயி(58). இவர்களுக்கு இளங்கோ(45) என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி விட்டது. மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வருகிறார்.

தங்கவேல்-கருப்பாயி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கவேல் மது அருந்திவிட்டு மனைவி கருப்பாயியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

தகராறின்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது ஆத்திரம் அடைந்த கருப்பாயி வீட்டில் இருந்த அரிவாளால் கணவன் தங்கவேல் தலையின் பின்புறம் மற்றும் கால் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷ் ஷர்மா, பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பாயியை கைது செய்தனர்.

மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட விவசாயியை மனைவியே வெட்டிக்கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com