தவறான சிகிச்சையால் தறி தொழிலாளி பலி- போலி டாக்டரிடம் தொடர் விசாரணை

சேலத்தில் தவறான சிகிச்சையால் தறி தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக கைதான போலி டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை
விசாரணை
Published on

சேலம்: 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த கே.கே.நகர், அய்யனாரப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் மணிகண்டன் (வயது33). 

தறித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது. இதனால்  அதே ஊரில் கே.கே. நகர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சிவக்குமாரிடம் ஊசி போட்டு கொண்டார்.

இதையடுத்து உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டதால், அவர் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 2-ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இதையடுத்து டிப்ளமோ மட்டும் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் சிவக்குமார் போட்ட ஊசியால்   மணிகண்டன் உயிரிழந்தாக அவரது தம்பி சீனிவாசன் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போலி டாக்டர் சிவக்குமாரை கைது செய்தால்தான் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுமதிப்போம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. மேலும், உறவினர்களும், பொதுமக்களும் இளம்பிள்ளை, காடையாம்பட்டி, மெய்யனூர் பிரிவு சாலையில் அதிகம்பேர்  திரண்டனர். 

இதைத்தொடர்ந்து சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீசார் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.   விரைவில் போலி டாக்டர் சிவக்குமாரை கைது செய்துவிடுவோம் என்று உறவினர்களிடம், போலீசார் தெரிவித்தனர். இதனை மணிகண்டனின் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து போலி டாக்டர் சிவக்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் அவரை கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிய நேரத்தில் சிவக்குமார் ஊசி போட்டதில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தலைமறைவாக   இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் இந்த பகுதியில் போலி டாக்டர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com