குடியாத்தம் அருகே உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி கட்டிட தொழிலாளி பலி

குடியாத்தம் அருகே வீடு கட்டும் பணியின்போது உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி கட்டிட தொழிலாளி பலியானார். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
குணசேகரன்
குணசேகரன்
Published on

குடியாத்தம்:

குடியாத்தத்தை அடுத்த வேப்பூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 44). கம்பி கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

குடியாத்தம்-காட்பாடி ரோடு காந்தி நகர் சிங்காரம் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் மாடியில் பில்லர் அமைக்க நேற்று மாலையில் குணசேகரன் கம்பி கட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பில்லருக்கு கட்டியிருந்த கம்பி சாய்ந்தது. உடனே குணசேகரன் கம்பியை பிடிக்க முயற்சி செய்த போது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் அந்த கம்பி பட்டது. அதிலிருந்த மின்சாரம் குணசேகரன் மீது பாய்ந்ததால் அவர் கீழே தூக்கி வீசப்பட்டு உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை நடத்தி குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு மனைவி 2 மகன்கள் உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com