

நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளை அருகே உள்ள பர்கிட்மாநகரைச் சேர்ந்தவர் முகமது அபுபக்கர் சித்திக் (வயது 48). இவரது மகன் இர்பான் (வயது 16). இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால், இர்பானும் அந்த பகுதியைச் சேர்ந்த 5 வாலிபர்களும் கிரிக்கெட் விளையாடும்போது தகராறு ஏற்பட்டது. அப்போது இர்பான் வீட்டுக்கு சென்றதால், அந்த 5 மாணவர்களும் அவரது வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. 5 மாணவர்களும் சேர்ந்து இர்பானை சரமாரியாக தாக்கினார்கள். அவரது அலறல் சத்தம் கேட்டு இர்பானின் தாத்தா முகமது சர்புதின் (வயது 65) மற்றும் தாயார் உள்பட 3 பேர் வெளியே ஓடி வந்து தடுத்தனர்.
அப்போது அந்த 5 மாணவர்களும் அவர்களையும் தாக்கினர். இதில் முகமது சர்புதீன் தாக்குதலில் கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முகமது சர்புதீன் இறந்தார்.
மேலும் தகராறில் காயம் அடைந்த இர்பான், அவரது தாயார் உள்பட 3 பேர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.
கொலை செய்யப்பட்ட முகமது சர்புதீனின் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.
சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணைபோலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமரசப்படுத்தினார்.
இதுதொடர்பாக பாளை தாலுகா போலீசார் அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் 2 மாணவர்களுக்கும், அவர்களின் உறவினர்களான தினேஷ், மாரியப்பன், சுரேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.