ஆண்டிமடம் அருகே அண்ணன் இறந்த சோகத்தில் தம்பியும் மரணம்

ஆண்டிமடம் அருகே ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து அண்ணன், தம்பி இறந்ததால் உறவினர்களும், கிராம மக்களும் சோகத்தில் மூழ்கினர்.
பாலமுருகன்- சுந்தரமூர்த்தி
பாலமுருகன்- சுந்தரமூர்த்தி
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் குப்பம் கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடம். இவருடைய மகன்கள் பாலமுருகன்(வயது 35), சுந்தரமூர்த்தி(30). இவர்கள் கூலி வேலை செய்து வந்தனர். இதில் சுந்தரமூர்த்திக்கு கடந்த சில ஆண்டுகளாக 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையிலும், பாலமுருகனுக்கு சில மாதங்களாக 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையிலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த பாலமுருகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதைக்கண்ட சுந்தரமூர்த்தி, அண்ணன் இறந்த சோகத்தில் அழுது கொண்டே இருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திடீரென சுந்தரமூர்த்தியும் உயிரிழந்தார்.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து அண்ணன், தம்பி இறந்ததால் உறவினர்களும், கிராம மக்களும் சோகத்தில் மூழ்கினர். இறந்துபோன பாலமுருகனுக்கு சத்யா என்ற மனைவியும் இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும், சுந்தரமூர்த்திக்கு மீனா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அண்ணன், தம்பி இருவரும் மிகுந்த பாசத்துடன் இருந்து வந்ததாகவும், இதனால் அண்ணன் இறந்த சோகத்தில் இருந்த தம்பியும் இறந்து விட்டதாகவும், கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com