குடிபோதையில் தகராறு: தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வீரபாண்டி:

திருப்பூர் கோழிபண்ணை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35) பனியன் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் தனது நண்பர்களுடன் டீக்கடை முன்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (24) , மணிகண்டனிடம் பழக்கத்தின் அடிப்படையில் பேசிய போது திடீரென்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் குடிபோதையில் இருந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது நண்பர்கள் சஞ்சய்குமார் (22), முருகன் (23), சுபாஷ்போஸ் (24) ஆகியோரை அழைத்து வந்து மணிகண்டனை தாக்கியுள்ளனர்.

இதில் மணிகண்டனின் பின்புற தலையில் அடிபட்டு அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து மணிகண்டனை திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி மணிகண்டனை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com