

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி மேலக்காலனியை சேர்ந்த பாண்டி மகன் மாரிமுத்து (வயது 27). லோடு ஆட்டோ டிரைவர். இவருக்கு ஜோதிலட்சுமி (21) என்ற மனைவியும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
மாரிமுத்துவுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த 4 மாத காலமாக ஜோதிலட்சுமி தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார். இதையடுத்து, மாரிமுத்து ஜோதிலட்சுமியை சேர்ந்து வாழ பலமுறை அழைத்தாராம். ஆனால், அவர் மாரிமுத்துவுடன் குடும்பம் நடத்த முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டாராம். மேலும், கணவரிடம் இருந்து நிரந்தரமாக பிரிந்து செல்ல கோர்ட்டு மூலம் அனுமதி பெற இருப்பதாகக் கூறினாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாரிமுத்து நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற கோவில்பட்டி மேற்கு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.