மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
Published on

மணப்பாறை:

மணப்பாறை நகராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதே நேரம் பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக முற்றிலுமாக குடிநீர் வினியோகம் இல்லாததால், கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறையாக காவிரி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com