

தாராபுரம்:
தாராபுரம் அருகே குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்த டிரைவரை தாயே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டணம் ஊராட்சிக்குட்பட்ட ஊத்துப்பாளையத்தை சோ்ந்தவர் நல்லசாமி (வயது 55) விவசாயி. அவரது மனைவி தமிழரசி (51). நல்லசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டாா். இதனால் தமிழரசி தனது மகன்களான சதீஸ் (31), சிதம்பரம் (27) ஆகியோருடன் ஊத்துப்பாளையத்தில் வசித்து வருகிறாா்.
இதில் சதீசுக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். சிதம்பரம் பொக்லைன் எந்திர வாகன டிரைவராக இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மது அருந்திவிட்டு தனது வீட்டிற்கு சிதம்பரம் வந்துள்ளாா். அப்போது அங்கு இருந்த தனது தாயிடம் தனக்கு மேலும் மது குடிப்பதற்கு பணம் வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்துள்ளாா்.
இதுபோன்று அவா் அடிக்கடி தனது தாயிடம் பணம் கேட்டு பிரச்சினை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்றும் அதே போன்று தகராறில் ஈடுபட்டதால் அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிதம்பரம், தாய் என்று கூட பாா்க்காமல் தமிழரசியை தாக்கினாா்.
இதனால் நிலை குலைந்து கீழே விழுந்த அவா் ஆத்திரம் அடைந்து அருகில் கிடந்த உலக்கையை எடுத்து சிதம்பரத்தை தாக்கினாா். இதில் உடல் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்த சிதம்பரம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன், இன்ஸ்பெக்டா் மகேந்திரன் உள்பட போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சிதம்பரத்தின் உடலை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரது உடலை பிரேத பாிசோதனைக்காக பிண அறையில் வைத்துள்ளனா்.
இதுகுறித்து சிதம்பரத்தின் தாயாா் தமிழரசி, அண்ணன் சதீஸ், அண்ணி நந்தினியிடம் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.