மாங்காடு அருகே நாயை கொடூரமாக கொன்ற 3 பேர் மீது வழக்கு

மாங்காடு அருகே நாய் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாங்காடு அருகே கொடூரமாக தாக்கப்பட்ட நாயை படத்தில் காணலாம்.
மாங்காடு அருகே கொடூரமாக தாக்கப்பட்ட நாயை படத்தில் காணலாம்.
Published on

பூந்தமல்லி:

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கெருகம்பாத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு தினந்தோறும் உணவு வைப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு வைக்கும் போது அங்கு உணவு சாப்பிட வரும் ஒரு நாய் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தேடி பார்த்தபோது அங்குள்ள தனியார் நிறுவனத்திற்குள் இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது நாய் பலமாக தாக்கப்பட்டு, முன் கால்கள் இரண்டும் உடைந்த நிலையில் முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் படுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்த நிறுவனத்தில் இருந்தவர்களிடம் கேட்டபோது:-

நிறுவனத்திற்குள் நாய் புகுந்ததால் அங்கு இருந்த ராஜேஷ், கீர்த்தி மற்றும் ரஞ்சித் ஆகியோர் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியது தெரியவந்தது.

மேலும் சத்தியராஜை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து காயம் அடைந்த அந்த நாயை, சத்தியராஜ் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த நாய் இறந்து விட்டது. இதையடுத்து நாயை அடித்து கொன்ற 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தியராஜ் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து புதைக்கப்பட்டுள்ள நாயின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய தாசில்தாருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு நாயை அடித்து கொன்றவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com