

குழித்துறை:
குமரி மாவட்டம் அருமனையை சேர்ந்த 17 வயது மாணவி திருவட்டார் அருகே உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மாணவியின் தந்தையின் செல்போனை ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு மாணவி தன்னுடன் இருப்பதாக கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது மகளை ஒருவர் கடத்தி சென்றதாக புகார் தெரிவித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கல்லூரி மாணவியை மீட்க மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர் மாணவியின் தந்தையிடம் மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த எண் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியில் இருப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியை தேடினர். அப்போது அந்த பகுதியில் ஒரு வீட்டில் மாணவி இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் மீட்டனர்.
மேலும் மாணவியை கடத்தி சென்ற நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பஞ்சாயத்து தெருவை சேர்ந்த ஏசுநேசன் (வயது 32) என்பவரை பிடித்தனர். இவர் இடது கை துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. விசாரணையில் ஏசுநேசம் எப்படியோ மாணவியின் செல்போன் எண்ணை பெற்று, அதன் மூலமாக மாணவியை தொடர்பு கொண்டு திருமண ஆசை காட்டி ஏமாற்றி கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் ஏசுநேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மாணவியை ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனை செய்தபின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.