தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் ஐ.லியோனி
திண்டுக்கல் ஐ.லியோனி
Published on

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை தயாரித்து, அச்சிட்டு வினியோகம் செய்வதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம் ஆகும். இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள், மேல்நிலைப் பள்ளிக்கான தொழிற்கல்விப் பாடப்புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் பல் நுட்பக் கல்லூரிக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியை இக்கழகம் திறம்பட மேற்கொண்டு வருகின்றது.

1960 மற்றும் 1970-ம் ஆண்டுகளில் வெளிவந்த பாடநூல்களை மீட்டுருவாக்கம் செய்து, இணையத்தில் கொண்டுவரும் 5 ஆண்டு திட்டத்தை 2017-லிருந்து இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு அரிய நூல்களை மறுபதிப்பு செய்யும் பணிகளை மேற்கொள்வதோடு, மொழி பெயர்ப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள, இந்நிறுவனத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஐ.லியோனி சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர் ஆவார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com