குளித்தலை அருகே கடன் தொல்லையால் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை

குளித்தலை அருகே கடன் தொல்லையால் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக இறந்தது.
தற்கொலை
தற்கொலை
Published on

குளித்தலை:

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரன் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. புரோகிதராக உள்ளார். இவரது மனைவி ஜனனி என்கின்ற ஜானகி (வயது 26). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 8 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு தனுவர்ஷன் (6) என்கின்ற மகன் உள்ளான். தற்போது ஜானகி 8 மாதம் கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

தனது குடும்பத்தில் கடன் பிரச்சினை இருப்பதாக ஜானகி தனது தந்தை வெங்கட்ராமனிடம் செல்போனில் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக ஜானகி மனஉலைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் ஜானகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை நேற்று காலை கண்ட உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஜானகியின் உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஜானகி கர்ப்பிணி என்ற காரணத்தால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு பிரேத பரிசோதனை செய்தபோது, ஜானகி வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையும் இறந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜானகியின் தந்தை வெங்கட்ராமன் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடன் தொல்லையால் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com