மாமனாருக்கு உணவில் வி‌ஷம் வைத்து கொன்றேன்- கைதான மருமகள் பரபரப்பு வாக்குமூலம்

கீழக்குளம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கனிமொழியை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
கைது
கைது
Published on

முதுகுளத்தூர்:

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள கேழல் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் ராஜா (வயது 27). இவரது மனைவி கனிமொழி (25).

இவருக்கு மாமனார் முருகேசன் (56) பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கனிமொழி பலமுறை கூறியும் கணவர் கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து மாமனாரை கொல்ல திட்டமிட்ட கனிமொழி கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாப்பாட்டில் வி‌ஷம் வைத்து கொடுத்தார். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட முருகேசன் பரமக்குடி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

உணவில் வி‌ஷம் வைத்ததை ரகசியமாக வைத்திருந்த கனிமொழி யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கனிமொழி கீழக்குளம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்து நடந்த விவரங்களை தெரிவித்தார்.

இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழத்தூவல் போலீசார் கனிமொழியை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கனிமொழி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை. எனக்கு 3 ஆண்டுகளக மாமனார் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். எத்தனையோ முறை கண்டித்தும் அவர் அதை கேட்காமல் என்னிடம் அத்துமீறி நடந்தார். கணவரிடம் சொல்லியும் அவரும் இதனை கண்டுகொள்ளவில்லை.

இதனால் இனிமேலும் பொறுக்க முடியாததால் மாமனாருக்கு சாப்பாட்டில் வி‌ஷம் வைத்து கொடுத்தேன். இதில் மயக்கம் அடைந்த அவர் பரமக்குடி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். நடந்த சம்பவத்தை நான் யாரிடமும் சொல்லாமல் மறைத்தேன். ஆனால் எனக்கு மனசு கேட்கவில்லை. இதனால் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com