கிரிப்டோகரன்சி மோசடி... துபாயில் இருந்து டெல்லி திரும்பிய தொழிலதிபர் கைது

கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக தேடப்பட்டு வந்த தொழிலதிபர், துபாயில் இருந்து டெல்லி திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கை
கைது நடவடிக்கை
Published on

புதுடெல்லி:

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தின் ஒரு பிரிவான கிரிப்டோகரன்சி முறை, உலகின் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி மூலம் வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால், இதில் சில சறுக்கல்களும் இருப்பதால், எல்லோரும் இதனை அங்கீகரிப்பதில்லை. 

இந்நிலையில், இந்தியாவில் கிரிப்டோகரன்சி பெயரில் சுமார் ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக, துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் உமேஷ் வர்மா மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து உமேஷ் வர்மா இந்தியாவில் இருந்து துபாய்க்கு தப்பிச் சென்றார். அவரை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். 

இந்நிலையில், துபாயில் இருந்து நேற்று டெல்லி திரும்பிய உமேஷ் வர்மா, டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த மோசடி வழக்கு தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கிரிப்டோகரன்சி பணப்பரிமாற்றத்தின் கீழ் புளூட்டோ எக்சேஞ்ச் என்ற திட்டத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வருமானம் கிடைக்கும் என உமேஷ் வர்மா, அவரது மகன் மற்றும் சிலர் விளம்பரம் செய்துள்ளனர். 

இதற்காக 2017 நவம்பரில் டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் சீட்டு கம்பெனி போன்ற ஒரு அலுவலகத்தை தொடங்கி உள்ளனர். பொதுமக்கள் செய்யும் முதலீட்டிற்கு ஈடாக ஜரஸ் நாணயம் எனப்படும் கிரிப்டோகரன்சியின் அலகுகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அலகுகளின் மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்துள்ளனர். இதனை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், சில மாதங்களில் வர்மாவின் நிறுவனம் வழங்கிய வருமானம் குறையத் தொடங்கியது. பின் தேதியிட்ட காசோலைகள் திரும்பி வந்தன. இதனால் வர்மாவை காவல்துறை கண்காணிக்க தொடங்கியது. இதனால் தனது குடியிருப்பு முகவரியை மாற்றிய அவர், இறுதியில் துபாய்க்கு சென்றுவிட்டார். அங்கு அவர் ஒரு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்.

அவர் மீது ஜோகிந்தர் சர்மா மற்றும் பலர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் புளூட்டோ எக்ஸ்சேஞ்சின் ஒரே உரிமையாளரான உமேஷ் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com