தக்கலை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தக்கலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.
தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.
Published on

பத்மநாபபுரம்:

தக்கலை அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் ஜினிமோள் (வயது 22). இவர் தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ. படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து கோவிலுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுபற்றி தக்கலை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஜினிமோள், வாலிபருடன் தக்கலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வாலிபர் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த விஷ்ணு (24) என்றும், இருவரும் காதலித்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது ஜினிமோளின் காதலுக்கு, அவருடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஜினிமோள் காதலருடன் செல்வதில் உறுதியாக இருந்தார். அதைத்தொடர்ந்து அவரை காதலருடன் சேர்த்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com