

புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அதன் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.
இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலையையும் உயர்த்துவது வழக்கம். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
பிப்ரவரி 4-ம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15-ம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்டன. பிப்ரவரி 25-ம் தேதி மறுபடியும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அடுத்து மார்ச் மாதம் 1-ம் தேதி 25 ரூபாய் உயர்த்தினார்கள்.
இவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் 125 ரூபாய் விலை உயர்த்தினார்கள். ஏப்ரல் 1-ந்தேதி சிலிண்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டது.
இதற்கிடையே 3 மாத காலத்திற்கு பின் கடந்த மாதம் சமையல் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் இன்று சமையல் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.850.50 ஆக இருந்தது. ரூ.25 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.875.50 ஆக உயர்ந்துள்ளது.
சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.