

பொள்ளாச்சி:
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர்ஆழியாறு, திருமூர்த்திமலை என ஒன்பது அணைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் பரம்பிக்குளம் அணை அதிக கொள்ளளவு கொண்டது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் பிஏபி திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. இதில் பரம்பிக்குளம் அணை நிரம்பி இருந்தாலும், நீர்வரத்து என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணமே இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை அணை தனது முழு கொள்ளளவான 72 அடியை எட்டியது. அணை முழுவதும் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.
தற்போது அணையில் இருந்து டனல் வழியாக தூணக்கடவு அணைக்கு ஆயிரம் கன அடியும், மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரி நீர் 2 ஆயிரம் கன அடியும் திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்தை கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்ட குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.