

நாமக்கல்:
கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 வயது பூர்த்தி அடையாத சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல், தொல்லை தருவது போன்றவை குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் தடை சட்டம் 2012-ன்-படி குற்றமாகும்.
மேலும் அவர்களை பாலியல் நோக்கத்தோடு பின்தொடர்வது, கண்காணிப்பது, சைகை காட்டுவது, ஆபாச படம் காண்பிப்பது மற்றும் எடுப்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு இந்த சட்டத்தின்படி 6 மாதம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.
பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் தன்னம்பிக்கையை இழந்து தங்களது வாழ்வின் முன்னேற்ற பாதையை அடைய முடியாமல் மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து விடுவார்கள். இதுகுறித்த மேலும் விவரங்களை அறியவும், புகார் அளிக்கவும் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.