கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஜெயிலில் அடைப்பு

கஞ்சா வியாபாரியை மிரட்டி ரூ.1 லட்சம் வாங்கிய கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி மகேஸ்வரி. விஜயகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். தற்போது திருந்தி 12 பேரை வைத்து கட்டிட தொழில் செய்து வருகிறார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விஜயகுமாரை தொடர்பு கொண்டு உன் மீது கஞ்சா வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஜெயிலுக்கு செல்லாமல் ஜாமீனில் வெளியே வர, சாதாரண வழக்குப்பதிவு செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சம் வேண்டும் என கேட்டனர்.

அதற்கு அவர் தற்போது கஞ்சா விற்பனை செய்வது இல்லையே, எதற்கு என் மீது தேவையில்லாமல் வழக்கு போட்டு தொந்தரவு செய்கிறீர்கள் என்றார். ஆனால் போலீசார் விடாமல் லஞ்சம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்த விஜயகுமார் நேற்று முன்தினம் தனது மனைவி மகேஸ்வரியுடன் கோவை கணபதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டு ராமசாமி ஆகியோரிடம் தன்னிடம் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கொடுத்தார். ஆனால் மீதம் ரூ.70 ஆயிரம் கொடுத்தால் தான் விடுவோம் என போலீசார் மிரட்டினர். பின்னர் விஜயகுமாரை மட்டும் போலீஸ் நிலையத்தில் வைத்து விட்டு மகேஸ்வரியை அனுப்பி விட்டனர்.

கணவரை காப்பாற்றுவதற்காக மகேஸ்வரி தான் கழுத்தில் அணிந்து இருந்த தாலி செயினை அடகு வைப்பதற்காக அந்த பகுதியில் அடகு கடைக்கு சென்றார்.அங்கு இருப்பவர்கள் முகவரி சான்றிதழ் வேண்டும் என கேட்டுள்ளனர்.

இதற்காக மகேஸ்வரி தனது ஊரில் உள்ள உறவினரை தொடர்பு கொண்டு முகவரி சான்றிதழை அனுப்பி வைக்குமாறு கூறி உள்ளார். அவர் இது குறித்து அங்குள்ள வக்கீல் ஒருவரிடம் தெரிவித்தார். வக்கீல் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்து புகார் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மகேஸ்வரியை தொடர்பு கொண்டு ரசாயனம் தடவிய ரூ.70 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். பணம் தயாராக இருப்பதாக போதைப்பொருள் போலீசாரிடம் மகேஸ்வரி தெரிவித்தார்.

போலீசார் விஜயகுமாரை கோர்ட்டுக்கு அழைத்து வரும் போது பணத்தை வாங்கி கொள்வதாக தெரிவித்தனர். மகேஸ்வரி ரசாயனம் தடவிய பணத்துடன் காத்து இருந்தார். அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து கண்காணித்து வந்தனர்.

போதைப்பொருள் இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டு ராமசாமி ஆகியோர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு வந்தனர். அப்போது மகேஸ்வரி ஏட்டு ராமசாமியை சந்தித்து ரசாயனம் தடவிய ரூ. 70 ஆயிரம் பணத்தை கொடுத்தார். அதனை அவர் வாங்கும் போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவர் மூலம் இன்ஸ்பெக்டர் சரோஜினியிடம் பணத்தை கொடுக்க செய்தனர். அப்போது அவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர்.

தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு இருந்து கணக்கில் வராத ரூ. 67,100 பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டு ராமசாமி ஆகியோரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பேரும் ஏற்கனவே விஜயகுமாரை மிரட்டி 3 முறை பணத்தை வாங்கியது தெரிய வந்தது.

விசாரணை முடிந்ததும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிசோதனைக்காக இன்று காலை 2 பேரையும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு 2 பேருக்கு கொரோனா உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனைகள் முடிந்ததும் இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டு ராமசாமி ஆகியோரை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தோஸ்திர மேரி முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இன்ஸ்பெக்டர் சரோஜினியை கோவை மத்திய சிறையில் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். ஏட்டு ராமசாமியை பொள்ளாச்சி சப்-ஜெயிலில் 15 நாட்கள் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 2 பேரையும் பாதுகாப்புடன் போலீசார் சிறைகளுக்கு அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com