கோவை மாவட்டத்தில் இதுவரை 379 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

கோவை மாவட்டத்தில் இதுவரை 379 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருப்பு பூஞ்சை
கருப்பு பூஞ்சை
Published on

கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா உச்சத்தில் இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதில் இருந்து குணமடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் என சிலர் கருப்பு பூஞ்சை என்ற நோயாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் நேற்று முன்தினம் வரை 379 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் இதுவரை 379 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டனர். அதில் 65 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றவர்கள் தங்களது ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து அதற்கான மருந்துகளை எடுத்து சர்க்கரை அளவை சீராக பாதுகாத்தால் இந்த நோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் நோய் அல்ல. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தலைவலி, மூக்கடைப்பு, கருப்புநிற சளி, மூக்கு, வாய் பகுதியில் கருப்பு புள்ளிகள் காணப்படுவது, கண்ணில் வலி அல்லது வீக்கம், பல்வலி, பல் ஆடுதல் ஆகிய அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும். கால தாமதமானால் கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியாக மூளைக்கு பரவும் வாய்ப்பு அதிகமாகும். உயிரிழப்பு கூட நேரிடலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com