கோடிக்கணக்கில் பணம் மோசடி- பெண் போலீஸ் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

ஈமு கோழி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில் பெண் போலீஸ் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்றம்
நீதிமன்றம்
Published on

கோவை:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஜோதிநகரை சேர்ந்தவர் கார்த்திக் சங்கர் (வயது 44). இவருடைய மனைவி காயத்ரி ஸ்ரீகார்த்திக் (42). இவர் ஈரோடு சிறுவலூர் போலீஸ்நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வந்தார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து கோபிசெட்டிபாளையத்தில் கடந்த 2010-ம் ஆண்டு கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா என்ற பெயரில் ஈமு கோழிப்பண்ணை நடத்தி வந்தனர். அங்கு சபின்கண்ணா (25) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.

அந்த நிறுவனத்தின் சார்பில் 5 வகையான கவர்ச்சி திட்டங்களை அறிவித்தனர். அதில், ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் ஈமு கோழிகள் வளர்க்க பண்ணை அமைத்து கொடுத்து 20 ஈமு கோழிகள் வழங்கப் படும். தீவனம் மருந்து மற்றும் மாத பராமரிப்பு தொகை ரூ.7 ஆயிரம் கொடுக்கப்படும்., ஊக்கத்தொகையாக ஆண்டு முடிவில் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இதை நம்பி ஈரோடு சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த 98 பேர், ரூ.4 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரத்து 100 டெபாசிட் செய்தனர். ஆனால் அவர்களுக்கு அறிவித்தபடி உரிய தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த மோசடி தொடர்பாக ஈரோடு மாவட்டம் பவானி சின்னப்புலியூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதில் தொடர்புடைய கார்த்திக் சங்கர், அவருடைய மனைவி காயத்ரி ஸ்ரீகார்த்திக், மேலாளர் சபின் கண்ணா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் சங்கர், அவருடைய மனைவி காயத்ரி ஸ்ரீகார்த்திக், மேலாளர் சபின் கண்ணா ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டார். மேலும் 3 பேருக்கும் ரூ.2 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு 3 பேரும் சேர்ந்து ரூ.2 கோடியே 14 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com