

ராய்ப்பூர்:
சத்தீஷ்கார் மாநிலம் தாண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் அவ்வப்போது அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், படே குத்ரா கிராமத்தின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையினர் நேற்று மதியம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது, மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசார் திருப்பிச் சுட்டதில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
மேலும் அப்பகுதியில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஒரு நாட்டு கைத்துப்பாக்கி, 5 கிலோ வெடிகுண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் பல்லவா கூறினார்.
என்கவுண்ட்டரில் பலியான 2 நக்சலைட்டுகளும், மொத்தமாக ரூ.4 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த முக்கியமான நபர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.