

சென்னை:
சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
புத்தாண்டு, பொங்கல் சமயத்தில் நடத்தப்படும் இந்த புத்தக திருவிழா உலகப்புகழ்பெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து புத்தக ரசிகர்கள் இந்த காட்சியில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற 43-வது புத்தகக்காட்சிக்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்து சில கோடி ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். 44-வது புத்தகக்காட்சியை நடத்த இருந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடத்த இயலவில்லை.
இந்தநிலையில் கொரோனா தாக்கம் குறைந்து பல்வேறு துறைகளுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், புத்தகக்காட்சியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று பபாசி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு அதை ஏற்று கடந்த 22-ந்தேதி அனுமதி வழங்கியது.
இதையடுத்து 44-வது புத்தகக்காட்சியை நடத்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 24-ந் தேதி புத்தகக்காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 9-ந்தேதி வரை புத்தகக்காட்சி நடைபெறும். காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை வாசகர்கள் புத்தகக்காட்சிக்கு சென்று புத்தகங்களை பார்வையிட்டு வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து புத்தகக்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகள் புத்தகக்காட்சிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக்காட்சிக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். நுழைவு கட்டணத்தை இணையதளம் வழியாகவும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக்காட்சிக்குள் செல்லவும், வெளியே வரவும் தனித்தனி வழிகள் அமைக்கப்படும். கார்களை நிறுத்தவும் விரிவான ஏற்பாடு செய்யப்படும். வழக்கம் போல சுமார் 500 அரங்குகள் புத்தகக்காட்சியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு அரங்கிலும் 3 வாசகர்கள் மட்டுமே சென்று புத்தகங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தளர்வுகள் வந்துவிட்டதால் வாசகர்கள் அதிகளவு வர வாய்ப்புள்ளது. புத்தகக்காட்சி ஒரு மாதம் தாமதமாக நடைபெற்றாலும் புத்தகக்காட்சிக்கு மக்கள் மத்தியில் வழக்கமான வரவேற்பும், ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.