பூந்தமல்லி தனி கிளை சிறையில் 2 கைதிகளிடம் செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்

பூந்தமல்லி தனி கிளை சிறையில் 2 கைதிகளிடம் செல்போன், சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிறை
சிறை
Published on

பூந்தமல்லி:

பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் தனி கிளை சிறை உள்ளது. இங்கு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைதானவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். தனி கிளை சிறை சூப்பிரண்டு முத்துராமன் தலைமையில் போலீசார் நேற்று திடீரென சிறையில் உள்ள கைதிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சிறையில் உள்ள முருகன் என்ற லோடு முருகன் (வயது 34), பாசில் (32) ஆகிய 2 கைதிகள் தங்கியுள்ள அறையில் இருந்து 2 செல்போன்கள், 2 சிம் கார்டுகள், 2 சார்ஜர்கள், 2 பேட்டரிகள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த செல்போனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரகசியமாக வைத்துக் கொள்ளும் செயலியும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. பின்னர் அவற்றை பூந்தமல்லி போலீசில் ஒப்படைத்து இது தொடர்பாக புகார் அளித்தனர். அதன்பேரில் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி தனி கிளை சிறையில் சமீப காலமாக செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்படுவதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் உள்ள உறவினரை பார்க்க வந்த பெண் ஒருவர் பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து வந்தபோது பிடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் மற்றும் வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இந்த தனி கிளை சிறையில் அடிக்கடி செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்படுவது அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com