நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு - மம்தா உறவினரின் மனைவிக்கு சி.பி.ஐ. நோட்டீஸ்

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் மம்தா பானர்ஜி உறவினரின் மனைவிக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது.
சி.பி.ஐ.
சி.பி.ஐ.
Published on

புதுடெல்லி:

மேற்கு வங்காளத்தில் ஏப்ரல், மே மாதவாக்கில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 3-வது தடவையாக ஆட்சியை பிடிக்க திரிணாமுல் காங்கிரசும், அதனிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவும் போராடி வருகின்றன.

திரிணாமுல் காங்கிரசில் மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக செல்வாக்குடன் திகழ்பவர், அவருடைய சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி ஆவார். அவர் எம்.பி.யாக இருக்கிறார். அவருடைய மனைவி ருஜிரா பானர்ஜி, நிலக்கரி சுரங்க முறைகேட்டு வழக்கில் சிக்கி உள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நிலக்கரி சுரங்க முறைகேட்டின் மூளையாக திகழ்ந்த மஞ்சி என்ற லாலா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. ஈஸ்டர்ன் கோல்பீல்டு லிமிடெட் நிறுவனத்தின் குத்தகை சுரங்கங்களில் இருந்து மஞ்சி சட்டவிரோதமாக நிலக்கரியை வெட்டி எடுத்ததுதான் குற்றச்சாட்டு ஆகும்.

இதில், அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிராவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ந் தேதி சி.பி.ஐ. மீண்டும் அதிரடி சோதனை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக, ருஜிரா பானர்ஜிக்கு சி.பி.ஐ. நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ருஜிரா பானர்ஜியின் வீட்டிலேயே அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம், தேர்தல் நெருக்கத்தில் அரசியல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜி தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

இத்தகைய தந்திரங்களின் மூலம் எங்களை அச்சுறுத்தலாம் என்று நினைத்தால், அவர்கள் ஏமாந்து விடுவர். நாங்கள் இதற்கு பணிய மாட்டோம். சட்டத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com